புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி

திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 5 ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

புல்வாமா தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய துணை இராணுவ வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் நாடு முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சுழி அருகே உள்ள உடையனாம் பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப் பொது மக்கள் இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழந்த வீரர்களுக்கு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி, மலர்கள் தூவி இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். புல்வாமா தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த உடையனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மணிகண்டன் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும், வீரமரணம் அடைந்த 40 இராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் தலைமையில் உடையனாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் பெயரில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், திருச்சுழி காவல் துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story