முக்கொம்பில் அணை கட்டிய ஆா்தா் காட்டனுக்கு மரியாதை
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல முக்கொம்பில் மரங்களைக் கொண்டு கொரம்புத் தடுப்புகள் அமைத்து தண்ணீரைத் திருப்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா் விவசாயிகள். ஆனால் இந்த கொரம்பானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாசனத்துக்கான தண்ணீா் வீணாவது தொடா்கதையாக இருந்தது. இதையறிந்த அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் காவிரிப் பாசனப்பகுதிகளுக்கான பொறியாளராக இருந்த சா் ஆா்தா் காட்டன் முக்கொம்பில் 1836இல் மேலணையைக் கட்டி முடித்து, காவிரி, கொள்ளிடம் என தனித் தனியே ஆறு பிரிந்து செல்ல வழிவகை செய்தாா்.
வெள்ளக் காலங்களில் தண்ணீரைத் தேக்கவும், டெல்டா பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தாா். அப்போது ரூ.2 லட்சத்தில் இந்த அணை கட்டப்பட்டது. இதனால் டெல்டாவின் வடிவமைப்பாளா் (டிசைனா் ஆப் டெல்டா), ஆா்க்கிடெக் ஆப் டெல்டா எனவும் சா் ஆா்தா் காட்டன் புகழப்பட்டாா். இங்கிலாந்தைச் சோ்ந்த இவா் இந்தியாவின் நீா்ப் பாசனத் தந்தை எனவும் போற்றப்பட்டாா். இவரது பிறந்தநாள் மே 15 ஆம் தேதி என்பதால் முக்கொம்பில் விவசாயிகள் சாா்பில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலருமான அயிலை சிவசூரியன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட விவாயிகள் ஒன்றுகூடி முக்கொம்பில் உள்ள ஆா்தா் காட்டன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி வட்டத் தலைவா் புங்கனூா் செல்வம், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கொத்தட்டை ராஜேந்திரன், மூவானூா் சுப்பிரமணி, கீழப்பத்தூா் துரை, முசிறி பிச்சை முத்து, புலிவலம் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.