விபத்தில் உயிரிழந்த ஒடிசாவை சேர்ந்த துணை ராணுவ படை வீரருக்கு அஞ்சலி

பெரம்பலூரில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவை சேர்ந்த துணை ராணுவ படை வீரரின் உடலுக்கு கலெக்டர் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்து, வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துணை ராணுவ படை வீரரின் உடலுக்கு ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்காக வரவைக்கப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி இருந்த ஒடிசா மாநிலம், நூகபடா மாவட்டத்தை சேர்ந்த புரமோத்குமார்(35) என்ற துணை ராணுவ படை வீரர், கடந்த ஏப்ரல் 3.ம் தேதி, பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூருக்கு சென்று விட்டு மீண்டும் தான் தங்கி இருக்கின்ற கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார்.

தண்ணீர் பந்தல் பகுதியில் இறங்கி, சென்னை -திருச்சி தேசிய சாலையை கடக்க முயன்ற போது, பெரம்பலூர் மாவட்டம், மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சுருளிராஜன்(32) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 7ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த துணை ராணுவ படை வீரர் புரமோத்குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏப்ரல் 8ம் தேதி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது, அங்கு அவரது உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர், துணை ராணுவ படை கமாண்டன்ட் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விமான மூலம் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பிரமோத்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் நகர போலீசார் விபத்துக்கு காரணமான சுருளிராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story