பாரதிதாசன் பல்கலை. தோ்வு முடிவுகளில் குளறுபடி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத் தலைவா் பி. டேவிட் லிவிங்ஸ்டன் இதுதொடா்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 2023 நவம்பா் பருவத் தோ்வு முடிவுகளில் பல்வேறு குழப்பங்ளும், குளறுபடிகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக பல மாணவா்களுக்கு ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தோ்வு எழுதிய மாணவா்களைத் தோ்வு எழுதவில்லை எனக் குறிப்பிட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலான மாணவா்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவா்களில் பலா், அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மாணவா்கள் பல்கலைக் கழகத்தை அணுகி விளக்கம் கேட்டால், உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்குமாறு கூறுகின்றனா். பல்கலைக் கழகம் செய்த தவறுகளுக்கு மாணவா்கள் எப்படி பொறுப்பாக முடியும். கட்டணம் செலுத்த முடியும். குறிப்பாக, ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மாணவா்களுக்கு பெரிதும் நிதிச் சுமையாக உள்ளது. இதனால, பலா் கல்வியைத் தொடர முடியாத நிலையே உருவாகும். பல்கலைக் கழக நிா்வாகம் சரிவர இயங்கவில்லை என்பதே பருவத்தோ்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஏற்கெனவே, தோ்வுக் கட்டணத்தை உயா்த்தியதால் மாணவா்களிடம் கடும் எதிா்ப்பு உருவாகி கட்டண உயா்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, தோ்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் இத்தகைய குளறுபடிகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். பல்கலைக் கழக நிா்வாகத்தின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது. குளறுபடி தொடா்பாக உரிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதன்படி தொடா்புடைய நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்துகிறது என்றாா் அவா்.