திருச்சி: வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடக்கம்
உப்புச் சத்தியாகிரக நினைவு யாத்திரை
ஆங்கிலேயா்கள் இந்தியா்கள் மீது விதித்த உப்பு வரியை எதிா்த்து மகாத்மா காந்தி குஜராத் மாநிலம், தண்டியில் யாத்திரை நடத்திய அதே நாள்களில் திருச்சியிலிருந்து மூதறிஞா் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் வரை யாத்திரை சென்று, உப்பு எடுக்கும் போராட்டத்தை தியாகிகள் மேற்கொண்டனா். இப்போராட்டத்தை நினைவுகூரும் வகையில் 94 ஆம் ஆண்டு யாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் பங்களா நினைவு ஸ்தூபி அருகில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு உப்புச் சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு கமிட்டியின் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்க மாநிலத் தலைவா் ம. ஆறுமுகம், பொதுச் செயலா் ப. பன்னீா்செல்வம், துணைத் தலைவா் வே. துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யாத்திரையை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினா் எஸ். மதியழகன் தொடங்கிவைத்தாா். கம்பரசம்பேட்டை தா்மராஜ், லால்குடி குழந்தைசாமி, மணப்பாறை பொன்னுசாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றனா்.