திருச்சி :சண்டையை தடுக்க சென்றவர் கொலை
திருச்சி மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர் கார்த்திக். கொத்தனார் வேலை செய்யும் இவர் தீபாவளியன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் புங்கனூர் அருகே உள்ள மில்கேட் பகுதிக்கு சென்றுள்ளார். மில்கேட்டிலிருந்து அல்லிதுறை சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த ராம்ஜி நகரை சேர்ந்த தர்ஷன் என்பவர் வாகனத்தை வேகமாக கார்த்திக் வண்டி மீது மோதுவது போல் வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தர்ஷன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓடியுள்ளார். பின்னர் அந்த வாகனத்தை கார்த்திக் அவரின் வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார். தொடர்ந்து தர்ஷன் கார்த்தி விட்டிற்கு வந்து சமாதானம் பேசி டூவீலரை எடுத்து சென்றுவிட்டார். இந்த பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு நேற்று இரவு தர்ஷன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கார்த்தி வீட்டிற்கு சென்று கட்டை மற்றும் செங்கலால் கார்த்தியை அடித்துள்ளனர். அப்போது கார்த்தி வீட்டின் அருகில் இருந்த உதயக்குமார் என்பவர் அவர்களை தடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் உதயக்குமாரையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின் அங்கிருந்தவர்கள் காயமடைந்த கார்த்தி மற்றும் உதயகுமாரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கார்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்ஷன், தீனா, முருகன், கபில், மனிஷ், இனியா மற்றும் பப்பு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் புங்கனூர் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்