சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் வாரம்தோறும் மஞ்சள் ஏலம்

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் வாரம்தோறும் மஞ்சள் ஏலம்

பைல் படம் 

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மின்னணு மூலம் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளதாக விழுப்புரம் விற்பனைக் குழு செயலாளர் சந்துரு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் விற்பனைக் குழு செயலாளர் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சின்னசேலம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுகின்றனர். ஆண்டுதோறும் 2,500 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கிறது. அறுவடை செய்ய மஞ்சள் பயிரினை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் ஆத்துார், சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகளைத் தேடிச் சென்று சிரமம் அடைகின்றனர். விவசாயிகளின் சிரமத்தைத் தவிர்க்க சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் வரும் 20ம் தேதி முதல் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தின் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.

இதில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக பங்கேற்று கொள்முதல் செய்ய உள்ளனர். குறிப்பாக, மேல்நாரியப்பனுார் மஞ்சள் பயிருக்கு தேசிய அளவில் வரவேற்பு உள்ளது. மேலும், மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் விளை பொருளை இருப்பு வைக்க கிடங்கு வசதியும் உள்ளது. முதல் 15 நாட்களுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் தினமும் குவிண்டாலுக்கு 20 பைசா வீதம் வாடகை முறையிலும் இருப்பு வைக்கலாம். இருப்பு வைக்கப்படும் மஞ்சளுக்கு வங்கி மூலம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படும்.

மார்க்கெட் கமிட்டி மூலம் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கான தொகை, மின்னணு பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பட்டுவாடா செய்யப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிக லாபம் பெற்று பயனடையவும். மேலும் விபரங்களை மஞ்சள் சாகுபடி செய்யும் விற்பனை கூட கண்காணிப்பாளர் 89259 02926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story