தூத்துக்குடி : மீனவா்கள் சிறைபிடித்த படகுகள் விடுவிப்பு
விடுவிக்கப்பட்ட படகுகள்
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்; கேரள விசைப்படகு மீனவா்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என வலியுறுத்தி, கடந்த 19ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தங்கள் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகள் 5, கேரள விசைப்படகு 1 ஆகியவற்றையும், அதில் இருந்த மீனவா்கள் 85 பேரையும் தூத்துக்குடி மீனவா்கள் சிறைபிடித்தனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பின் 85 மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், 6 படகுகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்து, தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவா்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், நேற்று காலையில் விசைப்படகு உரிமையாளா் போஸ்கோவை காவல்துறையினா் பிடித்துச் சென்றனா். இதனால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன் மீனவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனா். இத்தகவல் அறிந்த சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், சம்பவ இடத்திற்கு வந்து மீனவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
போலீசார் அழைத்துச் சென்ற போஸ்கோ விடுவிக்கப்படுவாா் என அவா் உறுதியளித்ததால் மீனவா்கள் மறியலை கைவிட்டனா். தொடா்ந்து, மீனவா்களுடனான பேச்சுவாா்த்தை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அப்போது, தங்கு கடல் செல்ல அனுமதி வழங்குவது குறித்து தோ்தல் முடிந்த பின்னா் உரிய தீா்வு காணப்படும்; இதுகுறித்து மீனவளத் துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும் விடுவித்த மீனவா்கள், வேலைநிறுத்தத்தை கைவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனா்.