தூத்துக்குடி : ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்ட அறிவிப்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை மாநாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே. எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் மாணிக் தாகூர் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். இதில், மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 15 கோடி குடும்பங்களை வறுமைப் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்த திட்டம். ஐநா மன்றமே இந்த திட்டத்தை இந்திய அரசாங்கத்தை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மாநில அரசு வழங்க வேண்டிய பங்கு தான் வந்துள்ளது. எனவே, வருகிற 15-ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளோம்.
இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இருந்தும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்திலும் பாரதிய ஜனதாவிற்குஆதரவாக உள்ள மாநிலத்திலையோ ஏன் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் மிகவும் அறிவுபூர்வமானவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஒருத்தரப்புக்கு எதிராக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமலாக்கத்துறை திடீரென்று சோதனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் மத்திய பிரதேசத்தில் செய்யட்டும் அரியானாவில் செய்யட்டும். மோடி நாளை சொல்லட்டும் நாங்கள் ஆளும் மாநிலத்திலும் அமலாக்கத்துறை அமைச்சர்கள் மீது சோதனை நடத்துகிறது என்றால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அமலாக்கத்துறை சோதனை அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணி வலிமையோடு இருக்கிறது என்பதால் தமிழகத்தில் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது. இதற்காக தலைகுனியமாட்டோம் நிமிர்ந்து நிற்போம் என்று தெரிவித்தார்.