ஆன்லைன் வர்த்தகம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது !
கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியரின் செல்போனுக்கு டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக லிங்க் ஒன்று வந்துள்ளது.
அதனுள் நுழைந்தபோது குறிப்பிட்ட வீடியோவை பார்த்து லைக் செய்தால் வங்கி கணக்கில். பணம் செலுத்தப்படும் என தகவல் வந்துள்ளது.
அப்பொழுது அவரது வங்கி கணக்கிற்கு 500 ரூபாய் பணம் வந்துள்ளது இதனை தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கூடுதல் பணம் தருவதாக தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை நம்பிய பேராசிரியர் தனது வங்கி கணக்கில் இருந்து 17 லட்சம் ரூபாயினை ஆன்லை மூலம் சம்பந்தப்பட்ட செயலில் செலுத்தியுள்ளார்.
அதற்குப் பின்னர் அவரது வங்கி கணக்கிற்கு பணம் ஏதும் வரவில்லை .இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சேலத்தைச் சேர்ந்த நந்தகோபால் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 6 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப் பணம்,19 ஏடிஎம் கார்டு,7 செல் போன் 15 காசோலை புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.