ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது - 1.35 டன் பறிமுதல்
கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார் சின்னசேலம் அருகே வி.கூட்ரோடு புறவழிச்சாலை பகுதியில் நேற்று மதியம் 12:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லேலாண்ட் தோஸ்த் லோடு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துார் அடுத்த பாலமனேர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் சதீஷ், 24; தம்பிகனிபள்ளியைச் சேர்ந்த மாதேஷ் மகன் விக்னேஷ், 28; என்பது தெரிந்தது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசூர், மடப்பட்டு, கூவாகம், இருந்தை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை புரோக்கர் மூலம் ஆந்திரா மாநிலம், பங்காரப்பேட்டையில் உள்ள தனியார் ரைஸ்மில்லுக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, சதீஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.