பெரம்பலூரில் சாராய ஊறல் போட்ட இரண்டு பேர் கைது
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பெரம்பலூர் வடக்கு மாதவி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பதாக பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சக்திவேலுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் வேங்கூர் நெடுமுடையின் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரம் மகன், பாக்கியராஜ் (37) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் (23) ஆகிய இருவரும், வடக்கு மாதவி சாலையில், வாடகைக்கு வீடு எடுத்து, தங்கி இருந்த வீட்டில் நாட்டு சாராயம் தயாரிக்க வைத்திருந்த சுமார் 200 லிட்டர் கள்ளசாராய ஊறலையும் 5 லிட்டர் நாட்டு சாராயத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் சாராய ஊறலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி . உத்தரவின்படி அதே இடத்தில் அழித்தும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிக்க ஊறல் போட்ட குற்றத்திற்காக மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Iமேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.
தகவல் தெரிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இரகசியம் காக்கப்படும் என காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.