தீக்காயமடைந்த பெண் உள்பட இருவர் உயிரிழப்பு
தற்கொலை
தஞ்சாவூரில் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதுடன் பெண் மீதும் தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவரும் சனிக்கிழமை உயிரிழந்தனர். தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சர்மிளா பானு (38). இவரது கணவர் விஸ்வநாதன் இவரை விட்டு பிரிந்து மலேசியாவுக்கு சென்றுவிட்டார். இதனால், சர்மிளா பானு தனது இரு குழந்தைகளுடன் எல்லையம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கும், கணவரின் நண்பரான திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையைச் சேர்ந்த சி. ரவிக்குமாருக்கும் (40) தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சர்மிளா பானு சமூக வலைதளம் மூலம் தொடர்பு கிடைத்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிராஜை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையறிந்து மனமுடைந்த ரவிக்குமார் மார்ச் 2 ஆம் தேதி இரவு சர்மிளா பானு வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ரவிக்குமார் எடுத்து தன் மீதும், சர்மிளா மீதும் ஊற்றினார்.
இதைத்தொடர்ந்து ரவிக்குமார் தன் மீது தீ வைத்துக் கொண்டு சர்மிளா பானுவை கட்டிப் பிடித்தார். இதனால், பலத்த காயமடைந்த ரவிக்குமார், சர்மிளா பானு, காப்பாற்றச் சென்று லேசான காயமடைந்த இரு குழந்தைகள் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சர்மிளா பானு, ரவிக்குமார் சனிக்கிழமை உயிரிழந்தனர். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.