ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் குண்டாஸ் வழக்கில் கைது
தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் சிறப்பு ரோந்து படை போலீஸ் எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே சிறுகலூர் மாமரத்துக்கொட்டாய் அருகில் ரேஷன் அரிசி சம்மந்தமாக கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைவான இடத்தில் மினிசரக்கு லாரியில் அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் அந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்த போது, ரேஷன் அரிசி என தெரியவந்தது. இதையடுத்து 22 சாக்கு மூட்டைகளில் சுமார் 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நல்லம்பள்ளி பாலவாடி கோவிந்தசாமி (46), பேட்றஅள்ளி அருகே கூரம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பைசுஅள்ளி சின்னபுதூர் கிராமத்தில் உள்ள நவீன அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, அரிசி ஆலை உரிமையாளர் வடிவேலு(52) என்பவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான கோவிந்தசாமி (46); அரிசி ஆலை உரிமையாளர் வடிவேல் (52) ஆகியோரை குண்டாசில் அடைக்க, தமிழக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தர வின்பேரில், கோவை மண்டல எஸ்பி சந்திரசேகரன் மற்றும் சேலம் சரக டிஎஸ்பி விஜய்குமார் ஆகியோர் தபுரிமாவட்ட கலெக்டர் சாந்திக்கு பரிந்துரை கடிதம் வழங்கினர். இதையடுத்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கோவிந்தசாமி, வடிவேல் ஆகியோரை குண்டாசில் அடைக்க உத்தரவிட்டார்.