இருசக்கர வாகனங்கள் நிறுத்தினால் பறிமுதல்: ஆணையர் எச்சரிக்கை
மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்
தூத்துக்குடி பேருந்து நிலைய வளாகங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நகரினை அழகு படுத்தும் விதமாக பிரதான சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகள் அலங்கார வளைவுகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி பேருந்து நிலைய வளாகங்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களது வாகனங்களை முறையாக வாகன நிறுத்தும் இடங்களில் முறையாக நிறுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் நிலையில் மேற்படி வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்" என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.