பொய்களை கூறி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் - டாக்டர் கிருஷ்ணசாமி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே தென்காசி நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்தார் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, இன்பத்தமிழன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா முத்தையா, ராஜவர்மன்,வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன் முன்னாள் அதிமுக சேர்மன் முத்துராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் அதிமுக,தேமுதிக,புதிய தமிழகம்,எஸ்டிபிஐ கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
முதலில் பேசிய புதிய தமிழக கட்சியின் நிறுவனரும் தென்காசி தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது.. கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றார்கள். திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஊரெல்லாம் சென்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு பிரச்சாரம் செய்கிறார்.
2019, 2021 ல் ஒரு செங்கலை காட்டி ஓட்டு வாங்கினார்கள். தற்போதும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டு கேட்டு வருகிறார்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு வலுவான நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை அதன் காரணமாகத்தான் விவசாயத்தில் நாம் பின்தங்கி நிற்கிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் வேலை இன்றி தவிக்கிறார்கள். அடிப்படை வசதி கூட கிராமங்களில் இல்லை. கடந்த 35 வருடங்களாக தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கக்கூடிய அடிப்படை வசதிகளை தெரிந்து வைத்த எனக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் இதற்கு பிறகு தான் நாடாளுமன்றத்தில் இது போன்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க முடியுமா என்று வியக்கத்தக்க வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும் உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒழிப்பேன்.தென்காசி தொகுதியை மிக வளர்ச்சி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி பெற்று அவர் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது. அவர் கொடுக்கின்ற முதல் வாக்குறுதி கனிம வளம்,இயற்கை வளம் கொள்ளைகளை திமுக அரசால் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பேசுகிறோம் ஆண்டாளின் அருளால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அமோகமாக வெற்றியை பெறுவார் அனைவரும் கூட்டணி தர்மத்துடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இந்த கூட்டணி எடப்பாடியாரும் நானும் இணைந்து பேசி முடிவானது இது மக்கள் போற்றுகின்ற கூட்டணியாகவும் தொண்டர்கள் போற்றும் கூட்டணியாகவும் தமிழகமே கொண்டாடும் கூட்டணியாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் எனது பிரச்சாரத்தை தொடங்கி 35 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தும் ஐந்து தொகுதிகளில் முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளேன்.
எனது பிரச்சாரத்தை கோயம்புத்தூரில் ஆரம்பித்து விருதுநகரில் முடிக்க இருக்கிறேன் எங்கு சென்றாலும் அந்த கூட்டணியை ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கின்றனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்தக் கூட்டணி புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி,புரட்சிக் கலைஞர் கேப்டன் ஆசிர்வாதங்களால் அமையப்பெற்று இருக்கிறது. மக்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி படித்தவர் என்பதால் நாடாளுமன்றத்தில் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளிலும் பேசக்கூடியவர் என்று தெரிவித்தார்.