வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை - மார்க்.கம்யூ சாலை மறியல்
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நல்லாடை முக்குட்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவிளையாட்டம் சரகத்தை சேர்ந்த 19 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு வழங்கப்படவில்லை. மேலும் கடந்த மாதம் நடத்திய போராட்டத்தில் 10 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்குவதாக உறுதி அளித்த நிலையில் தற்போது வரை தொகையை வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்கிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் சுப்பையன் பயிர் காப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டனர். இந்த சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் பகுதிகளில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.