அரசுப்பள்ளியில் 20 நாட்களாக மழை நீர் தேங்கிய அவலம்
தூத்துக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 நாட்களுக்கு மேலாகியும், மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 17,18 தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மழை நீர் தேங்கியது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் அகற்றப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில், சிவ அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து தெப்பக்குளம் போல் காணப்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை நீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சியளிக்கிறது. தேங்கியுள்ள மழைநீர் துர்நாற்றம் வீசி வருகிறது.சேறும் சகதியுமாக உள்ள பாதையில் நடந்து செல்லும்போது மாணவ, மாணவிகள் வழக்கி விழுந்து காயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.