கிருஷ்ணகிரியில் இன்று ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரியில் ஜூன் மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக முதல்வா் ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தாா்.
இந்தத் திட்டத்தின்படி, ஜனவரி முதல் டிசம்பா் வரையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை மாவட்ட ஆட்சியா், மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து, அங்கேயே கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதன்படி, இந்த மாதத்துக்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது கிருஷ்ணகிரி வட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வட்டத்தில் இன்று (ஜூன் 19) காலை 9 மணி முதல் 20-ஆம் தேதி காலை 9 மணி வரை கிராமங்களில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் ஆட்சியரால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வில், ஜூன் 19-ஆம் தேதி 4.30 மணி முதல் 6 மணி வரை, கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல், மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அவா் தெரிவித்துள்ளாா்.