தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்: கலெக்டர் உத்தரவு
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்," தமிழக அரசு தலைமை செயலாளரின் உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு அன்றாடம் முறையான குடிநீர் வழங்கிட வேண்டும்.
இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். விளைநிலங்களில் விவசாயிகள் தங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் நீரை பயன்படுத்த வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் இது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் பழுதின் காரணமாக குடிநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும்.
அதே போன்று ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வரி மற்றும் சொத்து வரிகள் இது வரை முறையாக வசூலிக்கபடவில்லை. சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை முறையாக வசூலிக்க வேண்டும். இடம் மற்றும் கட்டிடத்தின் பரப்பளவிற்கு உகந்த சொத்து வரியை கணக்கிட்டு பெற வேண்டும் என அவர் பேசினார்.