நாமக்கல்லில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "ரோடு ஷோ"!

நாமக்கல்லில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ!

ரோடு ஷோ நடத்திய மத்திய அமைச்சர்

70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்ய முடியாததை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார்.

நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். வாகனப் பேரணி மூலம் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் கே.பி. இராமலிங்கத்தை ஆதரித்து,

நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை மதியம் ஒரு மணி அளவில் அவர் பேசியதாவது... தமிழ் மொழி பழைமையான மொழி மட்டுமல்ல, கலாச்சாரத்தில் உயர்வான மொழி ஆகும். சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா எவ்வாறான நிலையை எட்டியுள்ளது என்பதை அனைவரும் அறிய வேண்டும். உலகத் தலைவர்கள் எவ்வாறு இந்தியாவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்ய முடியாததை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார்.

2014-க்கு முன் பொருளாதாரத்தில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. 2024-இல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. வரும் 2027-இல் மூன்றாம் இடத்துக்கு முன்னேறுவது உறுதி. 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றி நாம் ஆட்சி அமைத்தோம். 2024 தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 400 இடங்களை நாம் கைப்பற்ற போவது உறுதியாகும். இந்தியா கூட்டணியை கண்டு அஞ்சாமல், தேசிய ஜனநாயக கூட்டணி பாணியில் நாம் இந்த தேர்தலில் செயலாற்றுவோம். நமது பாஜக அரசு மக்களுக்கான திட்டங்களை சொன்ன வகையிலும்,

சொல்லாத வகையிலும் செய்து கொடுத்து வருகிறது. நம்முடைய வாக்குறுதிப்படி அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளோம். அதேபோல ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவோம் என தெரிவித்திருந்தோம். அதன்படியே அந்த சட்டப்பிரிவை நீக்கி, தற்போது இந்தியாவின் ஒரு அங்கமாக ஜம்மு காஷ்மீரை கொண்டு வந்துள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எந்த மதத்தினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நாட்டிற்கான பாதுகாப்புக்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று முறை தலாக் சொல்லும் முத்தலாக் சட்டத்தையும் ரத்து செய்துள்ளோம். இதன் மூலம் இஸ்லாமிய சகோதரிகள் பயனடைவர்.

21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்துள்ளது. ஏற்கனவே மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளும், இனிமேல் அளிக்க போகும் வாக்குறுதிகளையும் நமது பாஜக அரசு நிறைவேற்றி கொடுக்கும்.

பாதுகாப்பு துறையில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. பிற நாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வந்த நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நம் நாட்டிலேயே தளவாடங்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதன் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறோம். அது மட்டுமின்றி ரயில்வே தளவாடங்களும் விஞ்ஞானபூர்வமாக தயார் செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். மத்திய அரசு ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கிறது. வீட்டுக்கு ஒரு கழிப்பறை திட்டம், சமையல் எரிவாயு,

குடிநீர் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 2047-ல் இந்தியாவை மிகப்பெரிய நாடுகளின் பட்டியலில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுகவும், காங்கிரசும் தங்களுடைய குடும்பத்திற்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார்.

அவருடைய கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரியுங்கள் என்றார். நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள MGM தியேட்டர் அருகில் இருந்து, பேருந்து நிலையம் வரையில் சாலையின் இருபுறமும் திரண்டிருக்கும் மக்களை பார்த்து கை அசைத்தபடி அவர் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்திற்கு வாக்கு சேகரித்தார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story