மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை குமரி வருகை - போலீஸ் குவிப்பு
போலீசார் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி ஏற்கனவே பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த 5-ம் தேதி குமரி மாவட்டம் வருவதாக தகவல்கள் வெளியானது.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்தானது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் நாளை 13ஆம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் காலை 8 மணிக்கு வந்திறங்குகிறார்.
பின்னர் நாகர்கோவில் இருந்து கார் மூலமாக தக்கலை செல்கிறார். தக்கலை மேட்டுக்கடை பகுதியில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார். மேட்டுக்கடை சந்திப்பில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாரதிய ஜனதாவினர் கலந்து கொள்கிறார்கள். அமித்ஷா வருகையடுத்து தக்கலை நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. சாலையின் இருபுறமும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனம் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
தக்கலையில் இன்று முதலே பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரோடு ஷோ நடைபெறும் பகுதியில் நாளை காலை முதலே வாகன போக்குவரத்தை மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் கடைகள் அடைக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்கிறார்.