பாவை கல்வி நிறுவனங்களில் ஒருமைப்பாட்டுக் கலை விழா

பாவை கல்வி நிறுவனங்களில் ஒருமைப்பாட்டுக் கலை விழா

ஒருமைப்பாட்டுக் கலை விழா

இராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலைவிழா நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். தாளாளர் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமி வரவேற்றார்.

அவர் தம் உரையில், "வருடந்தோறும் இவ்விழாவினை இவ்வாறு சிறப்பாக நடத்தகின்ற பாவை கல்வி நிறுவனங்களின் உன்னதமான நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேசிய ஒருமைப்பாட்டு விழா மற்றும் விழாவில் ஏற்பாடு செய்திருந்த போட்டிகள் அனைத்தும் நம் தேசத்தையும், சமீபத்திய நம் சமூக சூழல்களின் நன்மை, தீமைகளை மாணவர்களாகிய நீங்கள் நன்கு அறிந்து கொள்ளவும், அவைகளைப் பற்றி பொறுப்பான குடிமக்களாக, உங்கள் சிந்தனைகளை மேற்கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கிறது. நம் இந்திய நாடானது வேற்றுமையில், ஒற்றுமை காணும் நாடாகும். எனவே தேசபக்தியினைக் குறித்த முழுமையான புரிதலையும், நமது தேசத்தின் மாண்பினையும், கலாச்சாரம் மற்றும் பண்பாடு, தொன்மையான நம் பெருமையினையும் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் எப்பொழுதும் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முதலாவது பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி என்பது அழியாச் சொத்தாகும். எனவே கல்வி என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, சிறந்த குடிமக்களாக உயர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியில் உங்கள்

பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மாணவப் பருவத்தில் இதுபோன்ற போட்டிகளில் பரிசினை வெல்வதற்காக நீங்கள் செலுத்தும் ஆர்வமும், முனைப்பும் எதிர்காலத்தில் உங்கள் வாழ்விலும் பிரதிபலித்து உங்கள் வாழ்வினையும் வெற்றியுள்ளதாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் மாற்றும். நீங்கள் அனைவரும் தலைசிறந்த சான்றோர்களாக உருவாக உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என்று பேசினார். முன்னதாக மாணவ, மாணவிகள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு

உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டறிந்து, கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர். இவ்விழாவில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், நடனம், கவிதை, பாட்டு, வினாடி வினா, பேச்சுப்போட்டி, கோலம் மற்றும் அறிவியல் கண்காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பாவை கல்வி நிறுவனங்களின் செயலாளர் டி.ஆர் பழனிவேல், முதன்மையர் (ஆலோசனை) சி. ஜெயலட்சுமி, ஆசிரியர் மேம்பாட்டுத் துறை முதன்மையர் கே.செல்வி, முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story