இறக்கப்படாத லாரி டிரைலர் - 4 மின் கம்பங்கள் சேதம்
விபத்தை ஏற்படுத்திய கனரக லாரி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கனிமவளம் ஏற்ற ஆலங்குளம் வந்த கனரக லாரி ஒன்றை பழுது நீக்குவதற்காக பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அருகே உள்ள "ஒர்க் ஷாப்பிற்கு" அதன் டிரைவரான கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 55) கொண்டு சென்றார். வேலை முடிந்து பிரதான சாலைக்கு லாரியை கொண்டு வரும்போது அதன் டிரைலர் மேல் தூக்கியவாறு இருந்ததை கவனிக்காமல் அந்த டிரைவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன. அதன் காரணமாக அங்கிருந்த 4 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இரவு நேரத்தில் கொட்டும் மழையிலும் மின் கம்பங்களை வெகு நேரம் போராடி சீரமைத்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.