வழங்கப்படாத சம்பளம் : ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

வழங்கப்படாத சம்பளம் : ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூரில் இரண்டு மாத காலமாக சம்பள பணம் வழங்கவில்லை எனக்கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில் அருணை கம்ப்யூட்டர் பிரைவேட் லிமிடெட் என்கின்ற ஒப்பந்ததாரர் மூலமாக 123 தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் ஆண் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாயும் பெண் பணியாளர்களுக்கு 280 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனவும், மேலும் 250 பேர் செய்யக்கூடிய வேலையை 123 பேர் மட்டும் செய்வதாகவும், மேலும் தங்களுக்கு தேவையான கையுறை, முககவசம் வழங்கப்படுவதில்லை எனவும் குப்பை சேகரிப்பதற்கு போதுமான வாகனம் இல்லாததால் குப்பைகளை தோளில் சுமந்து செல்வதாகவும் தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டால் நகராட்சி ஆணையாளர் செவி சாய்க்கவில்லை எனக்கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் உங்கள் பிரச்சனைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை சம்பளம் தரவில்லை என்றால் நீங்கள் ஒப்பந்ததாரரை தான் கேட்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் ஒப்பந்ததாரர் உரிய ஆவணத்தை கொடுத்தால் ஒப்பந்ததாரிடம் சம்பளப் பணம் வழங்கப்படும் எனவும், மேலும் இதுகுறித்து ஒப்பந்ததாரிடம் பேசி வரும் திங்கட்கிழமை அன்று சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆணையாளர் கூறியதின் பேரில் அங்கிருந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story