பாதுகாப்பற்ற மழைநீர் வடிகால் பணி - வடமாநில வாலிபர் படுகாயம்

பாதுகாப்பற்ற மழைநீர் வடிகால் பணி - வடமாநில   வாலிபர் படுகாயம்
மழைநீர் கால்வாய் பள்ளம்

திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இதேபோல் திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. பணிகள் பாதி முடிந்து உள்ள நிலையில் கான்கிரீட் கம்பிகள் அப்படியே நீட்டிக்கொண்டு உள்ளது. அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் திருப்போரூர் பகுதியில் தங்கி கொத்தனார். வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் நேற்று இரவு பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர்கால்வாய் பணி நடைபெற்ற இடம் வழியாக நடந்து வந்தார்.அப்போது அவர் கால்தவறி கால்வாய் பள்ளத்திற்குள் விழுந்து விட்டார். இதில் அவரது வயிற்றில் கம்பி குத்தி ரத்தம் வெளியேறியது. இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் வயிற்றில் கம்பி குத்திய நிலையில் கிடந்த ரமேசை யாரும் கவனிக்கவில்லை. அவர் விடிய, விடிய அப்படியே உயிருக்கு போராடியபடி கிடந்தார். இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் கால்வாய் பள்ளத்துக்குள் ரமேஷ் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக அடைப்புகள் எதுவும் வைக்காமல் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags

Next Story