தி.மலையில் விற்பனையாகாத பூசணிக்காய்களை சாலையோரம் கொட்டிச் சென்ற அவலம்
சாலையில் கொட்டப்பட்ட பூசணி
திருவண்ணாமலையில் விற்பனையாகாத பூசணிக்காய்களை வியாபாரிகள் ,விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர்
திருவண்ணாமலை கடந்த 23-ந் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பூசணிக்காய்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனை ஏராளமானவர்கள் வாங்கிச் சென்றனர். பூசணிக்காய்களை பயிரிட்ட விவசாயிகளும் நேரடியாக வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்த நிலையில் விற்பனை செய்யப்படாத பூசணிக்காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் பூசணிக்காய்கள் டன் கணக்கில் குவிந்து காணப்படுகிறது. பலர் ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். பல இடங்களில் அழுகி துர்நாற்றமும் வீசுகிறது. இதனை நகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. விற்பனைக்காக கொண்டு வரும் பூசணிக்காய்களை விற்பனை முடிந்த பின்னர் விற்பனை ஆகாத காய்களை வியாபாரிகளை அப்புறப்படுத்த அதற்கான வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவண்ணாமலைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பூசணிக்காய் கொண்டு வந்து விற்பனை செய்தனர். போதிய அளவில் பூசணிக்காய் விற்பனை ஆகவில்லை. அவற்றை திரும்ப கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு வாகன வாடகை கட்டணம் போன்ற செலவுகள் ஏற்படும். அதை தவிர்ப்பதற்காகவே ஆங்காங்கே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனை தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்
Next Story