பயன்படாத பயணியர் நிழற்குடை

பயன்படாத பயணியர் நிழற்குடை

பயணியர் நிழற்குடை 

மதுராந்தகம் ஏரிக்கரையில் திட்டமிடாமல் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை பயன்படாமல் உள்ளது.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரிக்கரை மீது பயணியர் நிறுத்தம் உள்ளது. மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணியர், சென்னை போன்ற நகர பகுதிகளுக்கு விரைவாக செல்ல, மதுராந்தகம் ஏரிக்கரை நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெயில் மற்றும் மழை என அனைத்து காலங்களிலும், ஏரிக்கரை நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி, வெயிலில் காத்திருந்து, பேருந்தில் பயணம் செய்து வந்தனர். ஏரிக்கரை மீது பயணியர் நிழற்குடை அமைத்துத் தர, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ., - எம்.பி.,ஆகியோருக்கும் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஏரிக்கரை மீது பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. போதிய இடவசதி இன்றியும், முறையான திட்டமிடல் இன்றியும், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. நிழற்குடை அமைக்கப்பட்ட பகுதியில், ஏரிக்கரை மீது சர்வீஸ் ரோடு இல்லாததால், அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. புதிதாக பயணியர் நிழற்குடை அமைத்தும், மக்களுக்கு பயனின்றி உள்ளது. திண்டிவனம் மார்க்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதுபோல், சென்னை மார்க்கத்தில் உள்ள ஏரிக்கரை நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில், சர்வீஸ் சாலை அமைத்துத் தர வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story