நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு: எம்.பி நன்றி

நாமக்கல் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டமைக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் பேராசிரியர் அரங்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேளையில் தமிழ்நாடு முதல்வருக்கும்,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, இந்த அரசாணை பெறுவதற்கு உரிய பரிந்துரைகளை முறைப்படி அரசு விதிகளுக்கு உட்பட்டு அனுப்பிய மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நகராட்சி தலைவர்,

ஆணையாளர், பொறியாளர் மற்றும் இதற்காக தீர்மானம் இயற்றிய நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்தமாக இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நாமக்கல் மாநகர மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாமக்கல் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த மாநகராட்சியுடன் 12 ஊராட்சிகளும் தற்போது இணைப்பதற்கான முன் மொழிவுகள் பெறப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வசந்தபுரம், வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்ப்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வேட்டாம்பாடி,

லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாநகராட்சியின் ஒட்டுமொத்த சதுர கிலோமீட்டர் பரப்பளவு என்று எடுத்துக் கொண்டால் 145.31 சதுர கிலோமீட்டர் ஆகும். நாமக்கல் நகராட்சி மட்டும் ஏறத்தாழ 55.24 சதுர கிலோமீட்டர். 2011 ஆண்டில் மக்கள்தொகை கணக்குப்படி நாமக்கல் நகராட்சியில் 1,19,491 மக்கள் தொகை கொண்டதாகும். இணைக்கப்பட்ட பகுதிகள் சேரும்போது, 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 3.50 லட்சம் மக்கள் தொகையை கொண்டதாக நாமக்கல் மாநகராட்சி அமையும்.

அதேபோன்று ஆண்டு வருமானம் என்பது நாமக்கல் நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.45 கோடியாகும். இன்றைய தினம் மொத்தமாக இணைக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து சராசரியாக ஆண்டு வருமானம்ரூ.47 கோடிக்கு மேல் மாநகராட்சியினுடைய ஆண்டு வருமானம் இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்துகின்றபோது, புதியதாக என்னையும் பகுதிகளில் புதிதாக வீட்டு மனைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்கின்றபோது அதற்கான அரசாங்கத்தின் விதிமுறைகள் படி அவை எளிதாக நடைமுறைப்படுத்தப்படும்.

அது மட்டுமில்லாமல் சாலை வசதி, குடிநீர் வசதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, சுகாதார வசதிகள் இவை அனைத்தும் மாநகராட்சி என்ற தரம் உயர்த்தப்படுகின்ற போது அரசாங்கத்தினுடைய மானியம் நமக்கு அதிகம் கிடைக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவை தலைவர் மணிமாறன், நகர மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, நகர திமுக செயலாளர்கள் சிவக்குமார் ராணா ஆனந்த், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story