வேரோடு சாய்ந்த மரம் - மின் கம்பிகள் துண்டிப்பு. போக்குவரத்து பாதிப்பு.
மின் கம்பிகளை சீர் செய்யும் மின் வாரிய ஊழியர்கள்
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் கனமழையால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த நிலையில் குழித்துறையில் இருந்து அருமனை செல்லும் பிரதான சாலையில் உத்திரங்கோடு அருகே கொட்டி தீர்த்த கன மழையால் சாலையின் ஓரம் நின்ற சுமார் 100 வருடம் பழமையான ராட்சத அயனி மரம் திடீரென வேரோடு சாய்ந்தது.
அருகே இருந்த 3 மின்கம்பங்கள் மீது விழுந்தது இதில் மின்கம்பங்களும் தரையில் சாய்ந்தன.மின்கம்பமும் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்த போது சாலையில் வாகனங்கள் எதுவும் செல் லவில்லை.சில வாகன ஓட்டிகள் முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்டு வாகனங்களை நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பித்தனர்.
3 மின் கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அருமனை போலீசார், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் குழித்துறை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சாலையில் விழுந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றியதோடு, மின் கம்பிகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.