தைல மரங்களை அகற்றி பசுமை காடு அமைக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தல்
புதுகையில் கிராமப்பகுதிகளில் உள்ள தைல மரங்களை அகற்றி பசுமை காடு அமைத்து, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுகை மாவட்டத்தில் திருவரங்குளம், திருமயம், பொற்பனைக்கோட்டை அரிமளம், அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தைல மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த மரங்களின் வேர்கள் பூமிக்கு அடியில் பல அடியா ஆழத்துக்கு ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தைல மரக்காடுகளில் இருந்து வெளிவரும் வெப்ப காற்று சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும் தைலமர இலைகள் கீழே விழுந்து மண் வளத்துக்கும் கேடாக உள்ளது.
ஒரு தைல மரத்தின் வேர் 30 அடி ஆழம் வரை செல்வதால் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக உறிஞ்சி விடுவதால் ஏரி குளப் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தைலம் மரங்கள் உள்ளன இவைகள் அனைத்தையும் ஒரு காலங்களில் இயற்கை காடுகளாக இருந்தன இதில் பல்வேறு வகையான மூலிகைகள் பறவைகள் விலங்கினங்கள் இருந்தன.
ஆனால் தைலம் மரங்கள் உருவாக்கப்பட்டதன் விளைவாக இவை அனைத்தும் அழிந்து விட்டன. இதனால் மழை வளமும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தைல மரங்களை வேருடன் அகற்றி பலன் தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.