சேலம் விமான நிலையத்திற்கு 100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

சேலம் விமான நிலையத்திற்கு 100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

ஆலோசனை கூட்டம்

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சேலம் விமான நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் விமான நிலைய ஆலோசனைக்குழுவின் 7-வது கூட்டம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவருமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், சேலம் விமான நிலையத்தில் இருந்து தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, பயணிகளுக்கு வசதிக்காக உணவகம் மற்றும் நவீன கழிப்பிடம் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக விமான வருகை, புறப்பாடு நேரங்களில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் வசதியை ஏற்படுத்திட வேண்டும். மிக வேகமாக வளர்ந்து வரும் சேலம் விமான நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளான உணவகம், நவீன கழிப்பிடம், விரிவுப்படுத்தப்பட வேண்டிய கார் பார்க்கிங் மற்றும் நவீன கூடுதல் ஓய்வறைகள் போன்ற பணிகளை மேம்படுத்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் ரூ.100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், இரவு நேரத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சேலம் விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா, ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் சுரேஷ், இம்மானுவேல், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story