ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வலியுறுத்தல்

மீனவர் நல வாரிய உபதலைவர்
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்காவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளரும்,மீனவர் நல வாரிய உபதலைவருமான மல்லிப்பட்டினம் தாஜுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஒன்றிய அரசின் தவறான திட்டங்களால் மீனவர்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும், கடந்த 10 ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை இல்லாமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், மீனவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்தி மீனவர்களையும் மீனவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து, மீனவர்களையும் கைது செய்திருப்பது இலங்கை அரசின் அத்துமீறலாகவே கருத வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இலங்கை தூதரக அலுவலகம் முன்பாக இலங்கை அரசை கண்டித்துபோராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்திருப்பதாக சந்தேகிக்கிறோம்.
தீபாவளி பண்டிகை வரும் நேரத்தில் இந்த கைது மிகவும் கண்டனத்துக்குரியது. உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
