வெண்காட்டீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சியில், 19-வது வார்டுக்கு உட்பட்ட கடப்பேரி பகுதியில், வெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கண்டராதித்த சோழரால் கட்டப்பட்டது. மேலும், விஜய நகர பேரரசு மற்றும் பாண்டிய மன்னர்கள் வாயிலாக புனரமைக்கப்பட்டது என, கோவிலில் உள்ள 27 கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. இக்கோவிலின் எதிரே, 1 ஏக்கர் பரப்பளவில், விகடகர தீர்த்த குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் குளமானது, பாண்டிய மன்னனால் வடிவமைக்கப்பட்டது.
வெண்காட்டீஸ்வரர் விகடகர தீர்த்தக் குளத்திற்கு, மதுராந்தகம் ஏரியில் இருந்து பாசன கால்வாயில் செல்லும் நீர், மின்வாரியத் துறை, யார்டு வழியாக செல்லும். குளம் நிரம்பியவுடன் ரயில்வே ஸ்டேஷன், மசூதி தெரு வழியாக நீர் வெளியேறும் வழி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, குளத்திற்கு நீர் வரும் வழி மற்றும் வெளியேறும் பகுதி கால்வாய்கள் துார் வாரப்படாமல் குப்பை கழிவுகள் நிரம்பி உள்ளன.
சில ஆண்டுகளாகவே, இக்குளத்தை சுற்றி சீரமைக்கப்படாமலும், நகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இதனால், சுற்றுப்புறம் மாசுபட்டு வருகிறது. குளத்தின் கரைகள், சில பகுதிகளில் உடைந்து சேதமாக உள்ளன. மேலும், ஜம்பு புற்கள் வளர்ந்தும் மற்றும் செடி கொடிகள் படர்ந்தும், குளம் பாழடைந்து வருகிறது. இக்குளத்தை சுற்றி, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும், மது பிரியர்களின் திறந்தவெளி மதுக்கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. எனவே, குளத்தை சீரமைத்து, கரைப்பகுதிகளை பலப்படுத்தி, நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைத்து தர, கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.