கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாடு - முக்கிய அறிவிப்பு
கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாடு - முக்கிய அறிவிப்பு
கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவா் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பெரும் குழப்பம் வணிகர்களிடையே இருந்து வருகிறது. எவை எல்லாம் தடை செய்யப்பட்ட நெகிழி என்கிற தெளிவு வணிகர்களிடம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து பல இடங்களில் கேரி பேக், டீ கப், நான்-ஓவன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, வணிகர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ‘பிளாஸ்டிக் தடை பற்றிய விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம்’ ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்று 29/12/2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்க வளாகத்தில் விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டத்தினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடத்திட ஏற்பாடு செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் காவல்துறை, மாசு கட்டுப்பாடு துறை, உணவு பாதுகாப்பு துறை, வனத்துறை, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டம் நம் வணிகர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் என்பதால் பெட்டிக்கடை முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைத்து வணிகர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம். மேலும் பிளாஸ்டிக் பைகள் (கேரி பேக், டீ கப், நான்-ஓவன் பைகள்) பயன்படுத்தும் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், துணிக்கடை, பல்பொருள் அங்காடி, காய்கறி கடை, உணவகம், பேக்கரி உள்ளிட்ட நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவன உரிமையாளர்களும் அவசியம் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும், பிரச்சனைகளையும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.