பட்டாபிராமபுரம் கிராமத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா
திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில், உற்சவர் முருகப் பெருமான், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான், ஆண்டுதோறும், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில் இன்று திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் படிகள் வழியாக நல்லாங்குளம் அருகே வந்தார்.
தொடர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த, மாட்டு வண்டியில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவர் முருகப் பெருமானை, சித்துார் சாலை, புறவழிச் சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தது. அங்கு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.