உத்தராபதீசுவரசாமி கோவில் சித்திரை பரணி விழா கொடியேற்றம்

உத்தராபதீசுவரசாமி கோவில் சித்திரை பரணி விழா கொடியேற்றம்

கொடியேற்றம் 

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடிஉத்தராபதீசுவரசாமி கோவில் சித்திரை பரணி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீசுவரசாமி கோவில் உள்ளது. பல்லவ பேரரசன் மாமல்லன் சேனாதிபதியான பரஞ்ஜோதி வாதாபி மன்னன் புலிகேசியை வென்று அங்கிருந்த வாதாபி கணபதியை கொண்டு வந்து திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்து சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவராலும் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்.

அப்போது இவரது அன்பை சோதிக்கும் வகையில் சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி அமுது கேட்டார்.அதன்படி சிறுத்தொண்டரும் இறைவனுக்கு பிள்ளைக்கறி அமுது படைத்தார் என்ற வரலாறுடைய இந்த உத்தராபதீசுவரசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பரணி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா மே 8-ந்தேதி வரை நடக்கிறது.

கொடியேற்ற விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.இதையடுத்து கொடிமரத்துக்கு மஞ்சள்,பால்,தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர்,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள்,ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 6-ந்தேதி தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சியும், 7-ந்தேதி அமுது படையல் விழாவும், 10-ந்தேதி தேரோட்டமும், 11-ந்தேதி நடராஜர் சத்திய புஷ்கரணியில் தீர்த்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags

Next Story