வாண வேடிக்கை நடத்தி சாதித்து காட்டிய பொதுநல அமைப்பினர்  

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவில் வாண வேடிக்கை நடத்தி  பொதுநல அமைப்பினர் சாதித்து காட்டினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகாகுண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிப். 20, மறு பூச்சாட்டுதல், பிப் 24ல் கொடியேற்றம் என தினசரி ஒரு நடந்தது. விழாவின் 15ஆம் நாளில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது. இதையடுத்து இரண்டு நாட்கள் தேர்த்திருவிழா நடந்தது. தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நாளில், கோவில் சார்பில், காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடப்பது வழக்கம். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை காண பல ஊர்களிலிருந்து வருவார்கள். திடீரென்று வாண வேடிக்கை ரத்து என்றதால் ஏராளமான பேர் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காளியம்மன் கோவில் திருவிழாவில் வாண வேடிக்கை ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சி வாண வேடிக்கை விழாதான். இது குறித்து விழாக்குழுவினர் வசம் பொதுநல ஆர்வலர்கள் கேட்டபோது, அறநிலையத்துறை அதிகாரி வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்த அனுமதி தரவில்லை என்றதாகவும், அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் வசம் கேட்டபோது, வாண வேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்ய நாங்கள் காரணம் இல்லை என்றும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வந்தனர். காளியம்மன் கோவில் வரலாற்றில் இதுவரை வாண வேடிக்கை நிகழ்ச்சி இல்லாமல் போனது இல்லை என்பதால், பொதுநல ஆர்வலர்கள் பாண்டியன், பிரகாஷ், பன்னீர்செல்வம், ரவி, சண்முகம் சித்ரா உள்ளிட்ட பலர், பொதுநல அமைப்பின் சார்பில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்த அனுமதி கடிதம் கேட்டனர். அதன்படி அதிகாரிகள் அனுமதி கடிதம் கொடுத்தும் ஒரே நாளில் அதற்கான ஏற்பாடுகளை செய்து நேற்று இரவு 07:00 மணியளவில் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தி சாதித்து காட்டினர். இதனை நடத்திய பொதுநல ஆர்வலர்களை ஊர் பொதுமக்கள், பெரியோர்கள் பாராட்டினர்.

Tags

Next Story