ஜெகநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கும்பகோணம் அருகே நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கும்பகோணம் அருகே 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பகோணம் அருகே நாதன் கோவிலில் உள்ள ஜெகநாதப்பெருமாள் திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழநாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.
இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த, புண்ணிய தலமும் ஆகும். இத்தலத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவேதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம் இங்கு மாதந்தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெற்று வருகிறது. இத்தகைய பெருமை பெற்ற வைணவ தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி பிர்மோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஜெகநாத பெருமாளுக்கும், செண்பகவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும் நடைபெற்று, அக்னி வளர்த்து பட்டாட்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தேறியது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9ம் நாளான இன்று 30ம் தேதி வியாழக்கிழமை கட்டுத்தேரோட்டமும்,10ம் நாள் நாளை 31ம் தேதி வெள்ளிக்கிழமை ஸர்வதர் திருமஞ்சனம் ஸப்தாவரணம், புஷ்ப யாகத்துடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.