மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
மேலூரில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி பங்குழி உற்சவம் நடைபெற்றது.
மேலூரில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற பங்குழி உற்சவம்: காப்புக்கட்டி விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் பூங்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு. மதுரை மாவட்டம் மேலூர் சிவன்கோவில் அருகேயுள்ள மிக பழமை வாய்ந்த திரௌபதியம்மன் கோவில் வைகாசி மாத பூங்குழி பெருந்திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இத்திருவிழாவையொட்டி, கடந்த 15 நாட்களுக்கு மேலாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் பெரியகடை வீதியில் உள்ள பூங்குழித்திடலில் கோவிந்தா கோஷத்துடன் பூங்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். முன்னதாக, திரௌபதியம்மன் - தர்மராஜா சமேதராக எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூங்குழி இறங்கும் உற்சவத்தின் போது, பூங்குழி இறங்கிய பக்தர்களில் இருவர் தவறி விழுந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர்.
இதில் பக்தர்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்திருவிழாவையொட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூங்குழி உற்சவத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..