திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசி மாதம் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். அந்த வகையில் முருகன் அவதரித்த நாளை கொண்டாடும் வகையில் முருகனின் ஆறுபடை வீடுகள் உட்பட உலகெங்கும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் முருகப்பெருமானின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும் மதுரை திமுக தெற்கு மாவட்ட சார்பாக அவனியாபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கர்ணா தனது குடும்பத்தினருடன் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து அரோகரா கோசத்துடன் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தார். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பாலபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

Tags

Next Story