திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
கன்னியாகுமரி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதாகும். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 23. ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறுகிறது. அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூசைகள் நடத்தப்படுகிறது. காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கருவறைக்கு அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக சாமி தரிசனம் செய்யலாம்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி 23. ம் தேதி மதியம் 15 நிமிடங்கள் மட்டுமே கோவில் நடை சம்பிரதாயத்துக்காக அடைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் இடைவெளியின்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலையில் கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடைபெறுகிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும். 9.30 மணி அளவில் கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.