திருச்சிற்றம்பலத்தில் வைரத்தேர் வெள்ளோட்டம்
திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீபுராதனவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த தேர் சிதிலமடைந்ததால் புதிய தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அனைத்து மண்டகப்படிதாரர்கள், பக்தர்களின் பங்குத் தொகையும் சேர்த்து பல லட்சம் ரூபாய் செலவில் 40 டன் எடை கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட திருத்தேர் திருச்சிற்றம்பலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வெள்ளோட்ட விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தம், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலாரவிசங்கர், அனைத்து மண்டகப்படிதார்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்சிற்றம்பலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் அருள் மேற்பார்வையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.