வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி ,4 பேருக்கு தீவிர சிகிச்சை

வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி ,4 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்துக்குள்ளான வேன்

மேலூர் அருகே மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் லேசான காயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகர்கோவில் தடிக்காத்தகுளத்தைச் சேர்ந்த ஜஸ்டின் (43) என்பவர் தனது குடும்பத்தாருடன் சனிக்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து தனியார் வேனில் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று யாத்திரை முடித்துக் கொண்டு வேனில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். வேனை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெபன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

அப்பொழுது வேன் இன்று அதிகாலை 4 மணி அளவில் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் தும்பைபட்டி என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஜஸ்டிஸ் (43) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனே அங்கு வந்த மேலூர் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த ஜஸ்டிஸ் உடலை மீட்ட மேலூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலை விபத்துக்கு உள்ளாகி அதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story