வந்தாச்சு"கந்த பூமி"சிவகாசியில் படகு சவாரி: மக்கள் உற்சாகம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாய் கடந்த நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக முற்றிலும் நிரம்பியது. சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில்,நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய்,பல ஆண்டுகளாக நீர்வரத்து குறைந்து போய் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே தேங்கும் நிலை இருந்து வந்தது.
இதனையடுத்து, பெரியகுளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகளை,சமூக ஆர்வலர்கள்,தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தூர்வாரி சீரமைத்தனர்.மேலும், பெரியகுளம் கண்மாயை தூர்வாரி, கரைகளை உயர்த்தி சீரமைத்து, கண்மாய் பகுதியில் மியாவாக்கி காடும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்பு பெரியகுளம் கண்மாய் முற்றிலுமாக நிரம்பியது. இதனால் சிவகாசி பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பல ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளம் கண்மாய் நிரம்பியிருப்பதால், விடுமுறை நாட்களில் கண்மாயில் படகு சவாரி விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து,பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத்துறை அனுமதியுடன், படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன்,இன்று காலை படகு சவாரியை தொடக்கி வைத்தார். பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் படகு சவாரி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறினர்.தொழில் நகரான சிவகாசியில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான இடங்கள் இல்லாத நிலை இருந்து வந்தது.
பூங்கா மற்றும் திரையரங்குகளும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளன. இந்த நிலையில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இருப்பதைப் போல, கந்தகபூமியான சிவகாசி கண்மாயில், படகு சவாரி தொடங்கியிருப்பது பொது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.