பழமையான கோவில் சிலை உடைப்பு - வாலிபர் கைது 

பழமையான கோவில் சிலை உடைப்பு - வாலிபர் கைது 
X
பைல் படம்
கன்னியாகுமரி அருகே 500 ஆண்டுகள் பழமையான பத்திரகாளியம்மன் சிலையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் அருகே ஆண்டி விளை பகுதியில் உப்பளத்தம்மன் என்னும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை வடக்குத்தாமரைக்குளம் இந்து பண்ணையார் நிர்வாகம் கவனித்து வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக தற்போது இந்து சமய அறநிலை துறை மூலம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இக்கோயில் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூசாரி பூஜைகளை மேற்கொள்வது வழக்கமாகும். கடந்த செவ்வாய் கிழமை அன்று பூஜை முடிந்து பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. மேலும் உள்ளே இருந்த அம்மன் சிலையையும் கீழே தள்ளி உடைத்து சென்றது தெரிய வந்தது.

ஆனால் வேறு பொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை. அம்மன் சிலை கழுத்து பகுதி மேல் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. சிலை சுமார் மூன்றடி உயரம் கொண்டது.இது தொடர்பாக இந்து சமய அறநிலை துறை அலுவலர் ராமச்சந்திரன் தென்தாமரை குளம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு நடராஜபுரத்தை சேர்ந்த வேலன் (29) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story