மாற்றி அமைக்கப்பட்ட பிளாட்பாரங்களில் வந்தேபாரத் சோதனை ஓட்டம்

மாற்றி அமைக்கப்பட்ட பிளாட்பாரங்களில் வந்தேபாரத் சோதனை ஓட்டம்

கோப்பு படம்


திண்டுக்கல் ரெயில்நிலையம் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 3 மற்றும் 4-வது பிளாட்பாரங்களில் கடந்த மாதம் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் 2 மற்றும் 5-வது பிளாட்பாரங்கள் வழியாக செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த குழப்பம் அடைந்ததுடன் ரெயிலை தவறவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

தொடர்ந்து 24 மணிநேரமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதும் நிறைவுபெற்று 3, 4-வது பிளாட்பாரங்களில் ரெயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன. இதனிடையே சென்னை யில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் வந்தேபாரத் ரெயிலின் வேகத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். வந்தேபாரத் ரெயிலுக்காக மற்ற ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து தாமரைப்பாடி வரை அதிவேகத்தில் வந்தேபாரத் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மதுரையில் காலை 10 மணிக்கு புறப்பட்ட வந்தேபாரத் 11.30 மணிக்கு தாமரைப்பாடியை வந்தடைந்தது. மீண்டும் தாமரைப்பாடியில் இருந்து 12.30 க்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தை சென்றடைந்தது. 55 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரெயில் எந்த ரெயில்வே ஸ்டேசனிலும் நிற்காமல் சென்றது. திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதன் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.

Tags

Next Story