குப்பை கிடங்காக மாறிய வரதராஜபுரம் ஊராட்சி சாலைகள்
கொட்டப்பட்டுள்ள குப்பைகள்
பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில், கடந்த ஓராண்டுக்கு முன் அனைத்து இடங்களிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதன் பின், பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பையை கொட்டி வருகின்றனர்.
இதனால், சாலையெங்கும் குப்பையாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக வரதராஜபுரம் ஊராட்சி, கோவிந்தராஜ் தெருவில் சாலையின் மையப்பகுதியில், நசரத்பேட்டை உட்பட சுற்றுவட்டார பகுதியினர் குப்பை கொட்டி வருவதால், அப்பகுதி சிறிய குப்பை கிடங்காக மாறி வருகிறது. குப்பையில் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், கால்நடைகள் அவற்றை சாப்பிடுகின்றன. இதனால், அவற்றுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் குப்பை கொட்டுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியை கடந்து செல்வோர், மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது. இதனால் நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், குப்பை அதிக அளவில் குவிக்கப்படுவதால், சாலையும் பாதியாக குறைந்து வருகிறது. அத்துடன், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் குப்பையை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றி, அப்பகுதியை சீரமைத்து, யாரும் குப்பை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.