ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா
வருஷாபிசேக விழா
சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவிலில் பன்னிரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அம்மன் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து அம்மனின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.
பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலில் சுற்றி வலம் வந்து மூலவர் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.
தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு புது பட்டு சேலை அணிவித்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோடி தீபம், கும்ப தீபம், நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகிஷாசுரமர்த்தினி அம்மனை வழிபட்டனர்