முதியோருக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லங்களுக்கு அரிசி வழங்குதல் மற்றும் பலதுறைகளில் சிறந்தோர்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்: ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் பலதுறைகளில் சிறப்பாக செயல்படுவோர்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துவதை தொடர்ந்து செய்து வருகிறேன்.
அந்த வகையில் சிம்மக்கல் மற்றும் செனாய்நகர் முதியோர் இல்லங்களுக்கு எனது தனிப்பட்ட சேமிப்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சிறந்ததோர்: 1. ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆணையர் முனைவர் மணிவண்ணன் தனது பொதுநலப் பணியோடு தமிழ் மொழி மேன்மைக்காக கவிதை புத்தகங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார். 2. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ரேடியோலஜி மருத்துவர் செந்தில்குமார் மருத்துவ உபகரணங்கள் சார்ந்த பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
3. ஒத்தக்கடையை சேர்ந்த பாரதிதாசன் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பசுமை பணிகளில் ஈடுபட்டு வருவதோடு ஒத்தக்கடை பகுதியில் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தி மரங்களை நட்டு பராமரித்து பசுமை சாலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 4. ஏழு வயதான புனிதபாரதி தமிழ் மொழி பேச்சுக்கலையில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், அபுபக்கர், ராஜன், பாலமுருகன், கண்ணன், செந்தில்குமார், அசோக்குமார், சசிகுமார், ஈஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.